திராவிட அரசுகள் தேவேந்திர மக்களுக்கு தந்த வலிகள் ...

Latest Post

விவசாயி மகனின், வித்தியாசமான விவசாய கண்டுபிடிப்பு!

Written By DevendraKural on Tuesday, 7 July 2015 | 22:43

விவசாயி மகனின், வித்தியாசமான விவசாய கண்டுபிடிப்பு!"இந்தியாவில் டாய்லெட்களின் எண்ணிக்கையைவிட, மொபைல் போன்களின் எண்ணிகை அதிகமாகி விட்டது. இதை வைத்து ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை உருவாக்க முடியும். அதில் ஒன்றுதான் மொபைல் போன்களை வைத்து இயக்கக்கூடிய இந்த கண்டுபிடிப்பு" என்கிறார் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானி முனைவர் விஜயராகவன்.
இவர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, முறையாக படித்து, இன்று வெளிநாட்டில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இருந்தாலும் பிறந்த ஊரில் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு விவசாயம் சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயத்தில் பல வேலைகள் எளிதாகிவிடும். இன்று செல்போனை வைத்துக் கொண்டு, பல வேலைகளை இருக்கும் இடத்திலிருந்து இயக்கி கொண்டிருக்கிறோம். அதுபோன்று விவசாய பணிகளையும் செய்ய முடியும் என்கிறார் விஜயராகவன் விஸ்வநாதன். செக் குடியரசு நாட்டிலிருந்து தொலைபேசி வாயிலாக நமக்கு அளித்த பேட்டியிலிருந்து,

"எனக்கு சொந்த ஊரு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். எங்கப்பா விஸ்வநாதன் தென்னை மர விவசாயி. எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கார். அதனால எல்லா அப்பாக்கள் மாதிரியும் புள்ளைங்கள நல்லா படிக்க வைக்கணுங்கற, கனவு அவருக்கு உண்டு. அதனால அக்கா, நான், தங்கச்சி மூன்று பேரையும் முதுநிலை பட்டதாரிகள் ஆக்கியுள்ளார். இவ்வளவுக்கு அவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தக்கூட தெரியாது. ஆனால், எங்கள பட்டப்படிப்பு படிக்க வைக்கிறதில ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டார். பனிரெண்டாவது முடிச்சிட்டு கோவை, அமிர்தா இன்ஜினீயரிங் கல்லூரியில எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை எடுத்து படித்தேன்.
கல்லூரியில் நுழையும்போது எனக்கு ஆங்கில மொழியறிவு குறைவாகத்தான் இருந்தது. வகுப்பில் பாடங்கள் ஆங்கிலத்தில்தான் நடக்கும். ஆசிரியர்கள் கேள்விகள் கேட்டால் கண்ணில் தானாகவே நீர் வழியும். கூனி குறுகி நிற்பேன். மொழி பிரச்னையால் முதல் செமஸ்டரில் நான் பெற்ற மதிப்பெண்ணும் குறைவுதான். பிறகு ஆங்கில பேராசிரியர் மினி மேனன், ஆங்கிலத்தை பேசுவதற்கு உதவினார். இரண்டாம் ஆண்டில் குடும்ப கஷ்டத்தால் படிக்க முடியாத நிலை. படிப்பை அப்படியே நிறுத்திக் கொள்ளலாமா? என்று இருந்தேன். அப்போதுதான் பி.வி.கோபி என்ற பேராசிரியர் மூலம் ஸ்காலர்ஷிப் கிடைக்கப்பெற்று, மீண்டும் படிப்பை தொடர்ந்தேன். முதலில் என்னை யாரும் சட்டையே செய்யவில்லை. இருந்தாலும் கிடைத்த ஒவ்வொரு செமஸ்டரிலும் என்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இன்ஜினீயரிங் படித்த 4 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. ஏன்? 1 மணி நேரம் தாமதாமாககூட வந்தது கிடையாது. கல்லூரி இறுதியாண்டின்போது, 100 சதவிகித வருகை பதிவேட்டுக்காக பாராட்டினார்கள். இன்ஜினீயரிங் கடைசி செமஸ்டரில் 88 சதவிகித மதிப்பெண். மொத்தமாக 79 சதவிகித மதிப்பெண்களுடன் வெளியே வந்தேன்.

கல்லூரியில் 3ம் ஆண்டில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் எல் அன் டி நிறுவனத்தின் வேலைக்கு தேர்வானேன். இதற்கிடையில, மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தது. ஒரு ஜெர்மன்காரர் வெளிநாட்டில் இருக்கும் படிப்புகளை பற்றியும், அதற்கு கிடைக்கும் ஸ்காலர்ஷிப் பற்றியும் கல்லூரியில் பேசினார். அதை பற்றி தெரிந்து கொண்டு 2007ல் ஸ்காலர்ஷிப் மூலமாக வெளிநாட்டில் படிக்க முயற்சி பண்ண ஆரம்பிச்சேன்.

வெளிநாட்டு படிப்புக்கு ஸ்காலர்ஷிப் இருந்தாலும், படிச்சி முடிச்சி வர்றதுக்கு அன்றைய நிலவரப்படி 15-20 லட்சம் ஆகும்னு சொன்னாங்க. அப்போ கோவை, ராஜபாளையம்னு பல வங்கிகளை கல்வி கடனுக்காக அணுகினோம். எந்த வங்கியிடமிருந்தும் சரியான பதிலே இல்லை. ‘உன் பேர்ல என்ன இருக்கு? நீ கடனை வாங்கிட்டு வெளிநாட்டு போயிட்டா பணத்தை யார் கட்டுவது?’ என்று பல கேள்விகள் கேட்டார்கள். அப்போதுதான் புரிந்தது வங்கிக் கடன்களுக்கும், நாம் வாங்கும் மார்க்குக்கும் சம்பந்தமில்லை என்பது.

அந்த நேரத்துல சென்னை, எழும்பூரில் இருக்கிற டபில்யூ யு எஸ் (வேர்ல்டு யுனிவர்சிட்டி சர்வீஸ்)க்கு அடிக்கடி வருவேன். அங்கே தங்கி, வெளிநாட்டு படிப்புகள், அதற்கான ஸ்காலர்ஷிப், எங்கெங்கு என்னென்ன கல்லூரிகள் என்பது பற்றி தேடுவேன். பல முயற்சிகள், தேடல்களுக்கு பிறகு இந்தோ-இத்தாலி 100 சதவிகித ஸ்காலர்ஷிப் மூலம் செப்டம்பர் 2007-ல் இத்தாலியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு எங்க மாமா ஜெயராமன் உட்பட பலரும் உதவி செய்தனர். அதிகம் வெளியில் போகாதவன், இத்தாலியில் என்னமாதிரியான சூழல் நிலவும் என்பது கூட தெரியாமல் போய் மிலன் நகரில் இறங்கி விட்டேன். அங்கு குளிர் வாட்டி எடுத்தது. என்னிடம் குளிருக்கு போட்டுக்கிற ஜாக்கெட் கூட இல்ல. பணம் பற்றாக்குறையால் வாங்காமல் இருந்தேன். அதனால நிமோனியா காய்ச்சல் வந்துடுச்சு. இதை பார்த்த ஒரு சீன மாணவர் அவருடைய ஜாக்கெட்டை கொடுத்து உதவினார்.
முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாம் ‘இனி வரும் காலங்களில் நேனோ டெக்னாலஜி முக்கிய வரவேற்பை பெரும்’ என்று பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அதை வைத்து ‘மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அன்டு நேனோ டெக்னாலஜி’ என்ற 2 ஆண்டு படிப்பை தேர்ந்தெடுத்தேன். இத்தாலி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து என்று மாறி மாறி வகுப்புகள் நடக்கும். இரண்டாண்டு முடிவில் 110க்கு 108 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றேன்.

பிறகு நானோ எலக்ட்ரானிக்ஸ், 3டி வடிவமைப்போடு கூடிய படங்கள் எடுக்கக்கூடிய கேமராக்கள் உற்பத்தி குறித்து பி.எச்.டி. படிக்க ஆரம்பிச்சேன். இதற்கு பிரெஞ்சு அரசு, கல்வி நிறுவனம், தொழிற்சாலைகளின் கூட்டு முயற்சியோடு இந்த படிப்பு தொடர்ந்தது.

இந்த நேரத்தில் ஐரோப்பிய கமிஷன் மூலம் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகம் (சிஇஆர்என்) ஒரு ப்ராஜக்ட்டை அறிவித்தது. அதாவது அட்வான்ஸ் ரேடியேஷனை கண்டறிவது பற்றிய ப்ராஜக்ட். இதற்கு பகுதி நேரமாக ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபடுவதற்கு விண்ணப்பித்து இருந்தேன். இந்த நேரத்தில் லேட் நைட்டில் வந்து படிப்பேன். மீண்டும் அதிகாலையில் எழுந்து பணிக்கு சென்று விடுவேன். 2012, அக்டோபரில் பி.எச்.டி. படிப்பை முடித்தேன். அப்படியே சி.இ.ஆர்.என்னில் ஆராய்ச்சி வேலைகள் தொடர்ந்துகிட்டிருந்தது. அந்த நேரத்தில் ராஜபாளையத்துக்கு ஒருமுறை வந்திருந்தேன். தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீரில் சுவை குறைவு, அதிக ரசாயன உரங்கள் பயன்பாடு ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்ததை பார்த்தேன். இதுதான் விவசாயம் குறித்து என்னுடைய ஆராய்ச்சியை தூண்டியது. தொடர்ந்து விடுமுறை நாட்களில் இந்த ஆராய்ச்சிக்காக தனியாக வேலை செய்தேன்" என்றவர் அந்த கண்டுபிடிப்பை பற்றியும் பேசினார்.

"ஸ்மார்ட் அக்ரி (நேர்த்தியான விவசாயம்) என்ற பெயரில் இதை ஆய்வு செய்து வருகிறேன். அதாவது நிலத்திலுள்ள மண்ணின் கீழ் சென்சாரை வைத்துவிட வேண்டும். இந்த சென்சார் பூமிக்கு அடியில் இருக்கும் மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, கார-அமில நிலை (பி.எச்.) ஆகியவற்றை அளந்துவிடும். இந்த சென்சாரிலிருந்து வரும் தகவல்கள் பண்ணையிலேயே கிணற்றுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறைக்குள் இருக்கும் ஜி.எஸ்.எம். மோடத்துக்கு வந்துவிடும். மோடத்திலிருந்து செல்போன் டவர் மூலமாக சர்வருக்கு செல்லும். சர்வரிலிருந்து கம்ப்யூட்டருக்கு வந்துவிடும். கம்ப்யூட்டரிலிருந்து நம்முடைய மொபைல் போனுக்கு தகவல்கள் வந்தடையும். இதெல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்துவிடும்" என்றவர் இதனால் ஏற்படும் பலன்களை பற்றியும் சொன்னார்.
"இப்போது இந்தியாவில் மழையளவு, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை அளந்து காட்டும் காலநிலை அறியும் கருவி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பூமிக்கடியில் தகவல்களை சேகரித்து கொடுக்கும் கருவி அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை. பூமிக்கடியில் இணைப்பின் மூலம் செயல்படுவது இந்த கருவியின் சிறப்பு. இந்த கருவியின் மூலம் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை அறியும்போது, அந்த நிலத்துக்கு ஈரத்தை பொறுத்து எவ்வளவு தண்ணீர் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளும். அதாவது ஏக்கருக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றால், ஈரப்பதத்தை பொறுத்து 5 ஆயிரம், 7 ஆயிரம், 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொடுக்கலாம். இதனால் மோட்டாரை இயக்கும் மின்சாரத்தின் அளவும் குறையும். அதேமாதிரி மண்ணின் வெப்பநிலையை அறிந்து அதற்கேற்ப தண்ணீரை அதிகம் கொடுக்க வேண்டிய பயிர்களுக்கு கொடுக்கலாம். இதனால் பயிர்கள் வாடிப்போவதை தவிர்க்கலாம். கார-அமில நிலையை அளவிடும்போது, மண்ணுக்கு என்ன சத்துக்கள் பற்றாக்குறையாக உள்ளதோ, அதை மட்டும் கொடுத்தால் போதுமானது. அதாவது உரம், யூரியாவை தேவைக்கேற்றாற் போல் கொடுத்து அளவிட முடியும்.

இந்த தகவல்களை வைத்து, ஒரு பண்ணையை நிர்வகிக்க கூடிய முடிவுகளை நாம் இருக்கும் இடத்திலிருந்தே கையாள முடியும். இன்று இந்தியாவின் முக்கிய பிரச்னை தண்ணீரும், உரங்களும்தான். இந்திய அரசு உரங்களுக்கென்று பல ஆயிரம் கோடிகளை ஆண்டுதோறும் செலவு செய்து வருகிறது. விவசாயிகளும் மண்ணுக்கு தேவையோ, இல்லையோ உரங்களை கொட்டி வருகிறார்கள். நல்ல மண் என்று தெரிந்தால் எதற்கு உரங்களை கொட்டவேண்டும். ஓரளவு வளமான மண்ணுக்கு உரங்களின் அளவையாவது குறைத்து கொள்ளலாம் இல்லையா? தண்ணீர் வளமுள்ள மண்ணுக்கு குறைந்தளவு தண்ணீர் கொடுத்து, தண்ணீர் இல்லாத பகுதிக்கு தண்ணீரை வழங்க முடியும்.

ஸ்விட்சர்லாந்தின் கிளைமேட்-கிக் என்ற அமைப்பு புதுமையான கண்டுபிடிப்பு என்று அங்கீகரித்திருக்கிறது. இதன் மூலம் மண்ணில் கார்பனின் அளவை குறைக்க முடியும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து மேன்மேலும் ஆராய்ச்சிகள் தொடர நிதிவுதவியும் அளித்து வருகிறது.
ஐரோப்பா மற்றும் பிற நாட்டினர் பங்குபெற்ற ஸ்விஸ் நேஷனல் வர்த்தக போட்டியில் இந்த கண்டுபிடிப்புக்காக முதல் பரிசை பெற்றுள்ளேன். இது ஆய்வுக்கூட வேலை மட்டும் அல்ல. இது நடைமுறையில் செயல்படுத்தக்கூடியது என்று இதில் கலந்து கொண்ட ஜூரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஜப்பான், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் இதுகுறித்து மாணவர்களிடத்தில் விளக்கியுள்ளேன்.

இந்தாண்டு ஐ.நா. சர்வதேச தொலைதொடர்பு துறை 150 ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. அதையொட்டி 150 இளம் விஞ்ஞானிகளை உலகம் முழுவதுமிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் முதல் 15 இளம் கண்டுப்பிடிப்பாளர்களில் நானும் ஒருவன்.

நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் இந்த கண்டுபிடிப்பை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து இந்தியாவிலும் பேசியிருக்கிறேன். ஆராய்ச்சி நிலையிலிருந்து, கருவியை உருவாக்கிவிட்டோம். அடுத்து கள ஆய்வு சோதனை மட்டுமே இருக்கிறது. இந்த கருவியை 40-50 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கி செயல்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், இதன் நன்மைகள் பன்மடங்கு. இந்திய அரசு மனது வைத்து உதவினால் இதை விரைவில் நடைமுறைப்படுத்துவிட முடியும். அரசுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அங்கீகாரம், விருதுகள் எனக்கு மட்டுமல்ல. என்னோடு பணிபுரியும் குழுவினருக்கும் பங்கு உண்டு. இந்த தொழில்நுட்பம் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பதே என் குறிக்கோள்" என்று சத்தமில்லாமல் சொல்லி முடித்தார் இந்த சாதனை மனிதர்.

'அன்றைக்கு தேவைப்பட்ட பிராபகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா?' - ஆவேச சீமான்

Written By DevendraKural on Saturday, 6 June 2015 | 03:53

'அன்றைக்கு தேவைப்பட்ட பிராபகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா?' - ஆவேச சீமான்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய  விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் சிலையை காவல்துறையினர் நேற்று இரவோடு இரவாக அகற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ்  உள்ளிட்ட தலைவர்கள் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பிரபாகரன் சிலை விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க, இதே பிரபாகரன் படம் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் வைக்கப்பட்ட நிலையில், அதனையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள். 

இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது வாக்கு கேட்டபோது அதிமுகவுக்கு தேவைப்பட்ட பிரபாகரன் படம், இப்போது ஆட்சியில் இருக்கும்போது தேவைப்படவில்லையா? என்று ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் பொங்கி தீர்த்துள்ளார். 

''வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, 'நாம் தமிழர் கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக் கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. அவை அனைத்தையும் சமாளித்துச் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்கள் எங்கள் பிள்ளைகள். லட்சம் இளைஞர்கள் திருச்சியில் திரள, பிரபாகரன் என்ற பெருநெருப்பே காரணம்'' என்று கூறிய சீமான் தொடர்ந்து அளித்த பேட்டியின் சில முக்கிய பகுதிகள் இங்கே... 

தேர்தல் நெருங்கும் சமயம், கூட்டம் திரட்டி தேர்தல் போட்டியில் இடம்பிடிப்பதுதான் உங்கள் மாநாட்டின் நோக்கமா?

கருணாநிதியை தீவிரமாக விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் அ.தி.மு.க அரசையோ, முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளையோ விமர்சிப்பது இல்லையே... ஏன்?

''கருணாநிதி, ஜெயலலிதா... இருவரையும் சமஅளவில் வைத்துதான் விமர்சிக்கிறோம். என்னுடைய நான்கு ஆண்டு காலப் பேச்சில் அம்மையாரையும் சாடியிருக்கிறேன். இப்போது தனித்துப் போட்டியிடுவதே ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடுதானே? கடந்த 50 ஆண்டு கால தமிழ்நாடு அரசியலின் மையம் கருணாநிதி என்பதால், அவர் மீதான விமர்சனங்கள் தீவிரமாக இருக்கின்றன. கருணாநிதி மட்டும் காமராஜர், கக்கன் போல இருந்திருந்தால், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டு அரசியலில் உருவாகியே இருக்க மாட்டார்கள்.''

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது, முன் எப்போதும் இல்லாத பலத்த விவாதங்களைக் கிளப்பியிருக்கிறதே... அந்தத் தீர்ப்பு பற்றி உங்கள் பார்வை என்ன?
''அது எப்படி, தீர்ப்பு சரியா... தப்பா என நாம் சொல்ல முடியும்? சட்டம் படித்த மேதைகள் அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். நான் இந்த அமைப்பையே மாற்ற வேண்டும் எனப் போராடுகிறேன். இந்தியாவே விற்பனைப் பண்டமாகிவிட்ட நிலையில், நீதியும் விற்கப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. அதனால் இந்த வழக்கு, அது தொடர்பான தீர்ப்பு பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது.''


திருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்?

''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா? மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''

'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்?

''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால்,  பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''

தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்தால், அதன் பிரச்னைகள் சரியாகிவிடுமா?

''சரி நான் கேட்கிறேன்... தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்யவில்லை என்றால், அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா? நாங்கள் ஆந்திராவையோ, கேரளாவையோ, கர்நாடகத்தையோ ஆள வேண்டும் எனச் சொல்லவில்லையே. எங்கள் அமைப்புக்கு 'நாம் திராவிடர்’ எனப் பெயர் வைத்திருந்தால், சீமான் நல்லவனாகியிருப்பானா? 'நாம் தமிழர்’ என்ற பெயர்தான் இங்கு பிரச்னையா?

ஆனால், ஆந்திராவில் என்.டி.ஆர் கட்சி தொடங்கும்போது 'திராவிட தேசம்’ என்றா பெயர் வைத்தார்? 'தெலுங்கு தேசம்’ எனத்தானே பெயர்வைத்தார்! இதெல்லாம் யாருக்கும் பிரச்னை இல்லை. அரசியலாகத்தான் தெரியும். ஆனால், நாங்கள் தமிழ்த் தேசியம் பேசினால், அது பக்கவாதமாகவும் முடக்குவாதமாகவும் இருக்கும். ஆக, அனுபவங்களின் அடிப்படையில் சொல்கிறேன்... உணர்வுள்ள தமிழன் வந்தால், இங்கு எல்லாம் சரியாகிவிடும். இதை நான் சத்தியம் செய்து சொல்கிறேன். அதற்குத்தான் வாய்ப்பு கேட்டு வருகிறோம். ஏனென்றால், நாங்கள் தேர்தல் கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறோம். அதனால் அற்ப தேர்தல் நலன்களுக்காகக் கட்சிகளிடம் சரணடையும் தவறை, நாங்கள் செய்ய மாட்டோம்.''

திராவிடம் என்ற வார்த்தையோ, திராவிடர் என்ற அடையாளமோ, இன்றைய காலச்சூழலுக்குப் பொருந்தவில்லையா?

''எந்தக் காலத்துக்கும் பொருந்தவில்லை; அதற்கான தேவையும் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள்... யாரும் தங்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தாதபோது, நமக்கும் அது தேவை இல்லை என்றே சொல்கிறேன். உடனே, 'தமிழன் என்று சொன்னால், பிராமணர்களும் தமிழன் என்று நம்மோடு வந்துவிடுவான்’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். நாங்கள் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஒரு பிராமணர்கூட 'நானும் தமிழன்தான்’ என வரவில்லை. ஆனால், அவர்கள் திராவிட இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள். ஆக, தமிழர்களின் மான உணர்வைச் சிதைத்து ஐயாவின் காலில் விழும், அம்மா பயணிக்கும் ஹெலிகாப்டரின் நிழலில் விழுந்து வணங்கும் அடிமை அரசியலைத்தான் திராவிடம் இங்கே கொண்டுவந்தது.''
 
டி.அருள் எழிலன்

பிரபாகரனின் சிலையை மீண்டும் வைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் அகற்றப்பட்ட ஈழப்போராளி பிரபாகரனின் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தமிழக அரசு மீண்டும் அமைத்துத் தர முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திலுள்ள கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். இதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு அதன் தமிழர் விரோதப் போக்கை மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது.

தெற்கு பொய்கை நல்லூரில் சேவூதராய அய்யனார் கோயில் அந்த ஊர் மக்களுக்கு சொந்தமான தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அக்கோயில் வளாகத்தில் ஊரையும், இனத்தையும் காத்த முன்னோரின் உருவச்சிலைகள் வைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, அக்கோயில் வளாகத்தின் ஒரு புறத்தில் கருப்பன் சாமி சிலையையும், மறுபுறத்தில் குதிரையுடன் பிரபாகரன் இருக்கும் சிலையையும் அமைத்த மக்கள் அக்கோயிலுக்கு நேற்று முன்நாள் குடமுழுக்கு நடத்தினர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ் குமார் தலைமையில் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திற்குச் சென்ற காவல்துறையினர், அந்த ஊரில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை இருந்த இடத்தின் மீது வெள்ளை வர்ணம் பூசி அங்கு சிலை இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் அழித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கோயில் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர், கோயில் குடமுழுக்கு குழுவினர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அழைத்த காவல்துறையினர், ‘பிரபாகரன் சிலை இங்கு இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் நாங்களே அகற்றி விட்டோம்’ என்று எழுதி தர வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் அனைவர் மீதும் பொய்வழக்கு பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பொதுமக்களும் மிரட்டலுக்கு பணிந்து அவ்வாறே எழுதிக் கொடுத்துள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடும் கண்டனத்துக்குரியது.
 
தெற்கு பொய்கை நல்லூரில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில்தான் பிரபாகரன் சிலை அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் இனத்தைக் காத்தவர் என்ற அடிப்படையில், மற்ற குலசாமிகளுக்கு எப்படி சிலை அமைக்கப்பட்டதோ, அதேபோல் பிரபாகரனுக்கு ஊர் மக்கள் சிலை அமைத்துள்ளனர். இது முழுக்க முழுக்க ஊர்மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். இதில் தமிழக அரசோ, காவல்துறையோ தலையிட எந்த உரிமையும் இல்லை. கோயில் வளாகத்தில் பிரபாகரன் சிலை அமைக்கப்படுவதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழக காவல்துறையினர் ஏன் சட்டவிரோதிகளைப் போல நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு சென்று சிலையை அகற்றினார்கள் என்பது தெரியவில்லை. தங்களது இனத்தைக் காத்ததாக, தங்களின் சொந்தமாக கருதுபவர்களின் சிலைகளை தங்களுக்குச் சொந்தமான இடத்தில் அமைத்து வழிபட மக்களுக்கு உரிமை உண்டு. இதை மதிக்காமல் காவல்துறை நடந்தது வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல்.

இந்தியாவிலேயே மாநில மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் ஓர் அரசு செயல்படுமானால் அது தமிழக அரசுதான். 2001 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை அகற்றிய ஜெயலலிதா, 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் வளாகத்தை இடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது பிரபாகரன் சிலையை அகற்றியிருக்கிறார்கள். முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் இதேபோன்ற அணுகுமுறைகள்தான் கடைபிடிக்கப்பட்டன. இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் திட்டமிட்டு நசுக்கப்பட்டன. உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை தரையிறங்க அனுமதிக்காமல் வந்த விமானத்திலேயே மலேஷியாவுக்கு திருப்பி அனுப்பி தமிழக அரசு அவமதித்தது.
தமிழ் இனத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் இந்தப் போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தெற்கு பொய்கைநல்லூரில் அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திரா பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது!

Written By DevendraKural on Wednesday, 8 April 2015 | 01:10
ஆந்திரா வனப்பகுதியில் ஆந்திரா காவல்துறையால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் ஆந்திரா பேருந்துகளை அடித்து நொறுக்கினர். இதில் 8 பேருந்துகள் சேதம் அடைந்தன. 

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தமுக பொதுச் செயலாளர் அதியமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பாலன் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதற்கான குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை புழல் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். 

தமிழர்கள் மீது இனியும் ஆந்திர அரசு தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை எச்சரிக்கும் விதமாகவும், பலியான தமிழர்களுக்கு ஆந்திரா அரசு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழர் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. 

கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை தமிழர் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என கைது செய்யப்பட்ட அதியமான் தெரிவித்துள்ளார். 

செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி

Written By DevendraKural on Tuesday, 7 April 2015 | 12:33

செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி தகவல்கள்!
லக அளவில் வனவளம் வெகுவாகக் குறைந்துவிட்ட சூழலில்,  செம்மரம் மட்டுமல்ல எந்த மரமாக இருந்தாலும் அவை வெட்டப்படுவதைத் தடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் மரங்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடும், இதில் 12 தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவமும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
வானுயர்ந்து வளர்ந்து நிற்கும் செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைத் தடுக்க, ஆந்திர போலீசார் துப்பாக்கிச் சூடு  நடத்தி அப்பாவித் தமிழக  தொழிலாளர்களை கொன்று குவித்து இது முதன்முறையல்ல. இதனால் சேஷாசலம் காடு தமிழர்களின் சுடுகாடாக மாறியுள்ளது.அந்த அளவிற்கு கண்மூடித்தனமாக துப்பாக்கி தர்பார் நடத்தி வருகிறது ஆந்திர காவல்துறை. சொற்ப கூலிக்கு மரம் வெட்ட செல்லும் தொழிலாளர்கள், சொற்ப நேரத்தில் துப்பாக்கிக் குண்டிற்கு இரையாகும் சோகம் தொடர்கதையாகி வருகிறது.

இன்று திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  தமிழகத்தின் மரம் வெட்டும் தொழிலாளர்கள் 12 பேர் உட்பட  20 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
திருப்பதி சேஷாசல வனப்பகுதியான  ஈசகுண்டாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல்,  செம்மரங்களை வெட்டுவதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு வந்த ஆந்திர போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில்  20 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வனத்துறை அதிகாரிகள்தான்  இவர்களை சுட்டுக் கொன்றதாக முதலில் தகவல் வெளியான நிலையில், பிரச்னை வெடிக்கலாம் என்ற எண்ணத்தில்  அடுத்த சில மணி நேரங்களிலேயே, இந்த துப்பாக்கிச் சூட்டை ஆந்திர மாநில சிறப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள்தான் நடத்தினார்கள் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 9 தொழிலாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்  என்று தெரிய வந்துள்ளது. 

இந்திய அளவில் ஆந்திராவின் சித்தூர், கடப்பா, கர்னூல், நெல்லூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குட்பட்ட சேஷா சல வனப்பகுதியில்தான் செம்மரங்கள் எனப்படும் சிவப்பு சந்தன மரங்கள் அதிக அளவில் உள்ளன. உலக அளவில் இந்த செம்மரங்களுக்கு பெரிய சந்தை இருக்கிறது.அங்கீகரிக்கப்பட்டும், அரசின் அங்கீகாரம் இல்லாமலும் செம்மரங்கள் கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வணிகமாக வளர்ந்துள்ளது. தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு மரம் வெட்டும் தொழிலாளர்கள்  செம்மரங்களை வெட்டும் பணியில் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஒரு மரத்தை வெட்டி பட்டைகளை உரித்து, பளபளப்பாக்கி,  5 அல்லது 6 அடி நீளத்திற்கு சரி சமமாக வெட்டி,  கடத்தும் வாகனங்களில் ஏற்றி முக்கிய இடங்களுக்கோ அல்லது இதற்கென உள்ள குடோன்களுக்கோ கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு கிலோ கணக்கில் கூலி வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு மரத்திற்கு சுமார் 2,000 முதல் 3,000 வரை கூலி கிடைக்கும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் மலைப்பகுதிகளில் அடர்ந்து வளர்ந்து இருந்த சந்தன மரங்கள் மொத்தம் மொத்தமாக வெட்டி கடத்தப்பட்டு கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு எப்படி விற்கப் பட்டதோ அதைக் காட்டிலும் கூடுதல் வேகத்தோடு செம்மர கடத்தல்  நடந்து வருகிறது. இதில், துரதிர்ஷ்டமாக செம்மரங்கள் ஆந்திராவில் குறிப்பாக தமிழக எல்லையான திருப்பதி வனப்பகுதியில் ஏக்கர் கணக்கில் செம்மரங்கள் வளர்ந்துள்ளன. 
வெட்டப்பட்ட மரங்களை கடத்தல்காரர்கள், தங்களின் பிரத்யேக  ‘பைலட்’ கள் மூலம் கடத்தப்படும் வாகனங்களைக்  கண்காணித்து,  போலீஸ் கெடுபிடி உள்ளனவா என்பதை உடனுக்குடன் வாகன டிரைவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து எல்லை தாண்டி கடத்துகிறார்கள். இந்த முறையில்தான் செம்மரங்கள் மாநிலம் தாண்டி மாநிலம் கடக்கின்றன. பின்னர் சென்னை, மங்களூரு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு துறைமுகங்கள் மூலம் கண்டெய்னரில் ஜப்பான், துபாய், சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்குக்  கடத்தப்படுகிறது.

வெட்டப்படும் செம்மரங்கள், இங்கு டன் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்கு கைமாறுகிறது. இதுவே வெளிநாட்டில், ஒரு டன் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்கப்படுகிறது. அரசியல்வாதிகள், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துணை இல்லாமல் கோடிக்கணக்கான செம்மரங்களைக் கடத்துவது துளி கூட சாத்தியமில்லை. இதில் ஈடுபடும் மிகப்பெரிய கடத்தல் முதலாளிகள் பற்றியும் பணமுதலைகள் பற்றியும் உண்மையான விவரங்கள் வெளியே தெரிவதில்லை. 

ஆனால், இவர்கள் மூலம் செயல்படும் செம்மரக்கடத்தல் புரோக்கர்கள், சிறிய அளவிலான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வனத்துறை மற்றும் காவல்துறையின்  சோதனையின்போது பிடிபடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் பிரபல தாதாவான அப்பு செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவமனை சிகிச்சைப் பலனிக்காமல் மரணம் அடைந்தது நினைவூட்டத்தக்கது.

செம்மரக் கடத்தல் இன்றோ, நேற்றோ நடக்கும் கடத்தல் அல்ல. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக  நடைபெற்று வரும் ஒன்று. ஆனால், தற்போது திடீ ரென ஆந்திர போலீஸார் தமிழக கூலி ஆட்கள் மீது `என்கவுன்ட்டர்` நடத்துவதன் பின்னணி திடுக்கிட வைக்கிறது.

கடந்த 2013 ஆண்டு முதல் ஆந்திர  போலீஸ் என்கவுன்ட்டரில் 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனை வரும் தினக்கூலிகளாக மரங்களை வெட்ட வந்தவர்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு, திருப்பதி வனக்காவலர்கள் ஸ்ரீதர், டேவிட் ஆகியோர் செம்மரக் கடத்தல் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சேஷாசலம் வனப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயுதங்களுடன் போலீஸார் 24 மணி நேரமும் கடத்தல் கும்பலை பிடிக்க கண்காணித்து வருகின்றனர்.

அதோடு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில்,முதல்வர்  சந்திரபாபு நாயுடு இந்த கடத்தல் விசயத்தில் போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். ஏனெனில் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பதி மலைப்பாதையில் சந்திரபாபு சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில்  நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக, செம்மரக் கடத்தல் தொழிலதிபர் கொல்லம் கங்கி ரெட்டியின் பெயர் அடிபட்டது. பின்னர் ரெட்டியைப் பொறி வைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு  ஜாமீனில் வெளியே வந்து, தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கங்கி ரெட்டியினால் தனது உயிருக்கு ஆபத்து என சந்திரபாபு நாயுடு எப்போதும் அச்சத்தோடு இருப்பதால் தலை மறைவாகி உள்ள கங்கி ரெட்டியை, ஆந்திர போலீஸார் தீவிரமாகத்  தேடி வருகின்றனர்.

அதனால்  சேஷாசலம் வனப்பகுதியில் ஒரு கடத்தல்காரர் கூட இருக்கக் கூடாது என்ற சந்திரபாபுவின் ரகசிய உத்தரவின் பேரில்தான், தற்போது போலீஸார் தங்களது தேடுதல் வேட்டையை அதிகரித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் மட்டும்  530 சிறப்புப் படையினர் இந்த ‘ஆபரேஷன் சேஷாசலம்’ எனும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஆந்திர  செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்  தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்த சம்பவம். இது தமிழக எல்லையோர மாவட்டங்களான வேலூர்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

வன உயிரினங்களைக் கொல்ல தடைவிதிக்கும் சட்டம், மனித உயிர்களை சுட்டுக் கொள்வதை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.கடத்தல் குற்றமே.அதற்கு கைது செய்யவும் விசாரிக்கவும்,சிறையில் அடைக்கவும் சட்டங்கள் உள்ளன. இந்த விசயத்தில் துப்பாக்கிச் சூடு மட்டுமே நிரந்தரமான தீர்வு இல்லை.மாறாக வேறு வகையிலான பிரச்னைகளுக்கு வித்திடும் என்பதை ஆந்திர மாநில அரசு யோசித்து உடனே செயல்படுத்த வேண்டும்.வங்கக் கடல் பகுதியில்,ஆந்திர மீனவர்கள் எல்லை தாண்டி, தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன் பிடிக்கும் பகுதியில் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இதில் அவ்வப்போது தமிழக காவல் துறையால் கைதும் செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது கைது நடவடிக்கைக்குப் பதிலாக துப்பாக்கிச் சூடு மேற்கொண்டால் என்ன ஆகும் என்பதை ஆந்திர அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது.     

கடந்த சில ஆண்டுகளாக கடத்தல்  கும்பலிடமிருந்து 20 ஆயிரம் டன் செம்மரங்களை ஆந்திர அரசு பறிமுதல் செய்து குடோன்களில் பாதுகாப்பாக வைத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 50,000 கோடி என்று கூறப்படுகிறது. இந்த 20 ஆயிரம் டன் செம்மரங்கள் வெளிநாடுகளில்  சுமார் 2 லட்சம் கோடி வரை விற்பனையாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மரங்களை குளோ பல் டெண்டர் மூலம் விற்க   மத்திய அரசு, ஆந்திரத்திற்கு  அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செம்மரங்களின் மூலம் ஜப்பான், சீனா,ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இசைக்கருவிகள்  வீட்டு அலங்கார பொருட்கள், பொம்மைகள், புத்தர் உள்ளிட்ட கடவுள் சிலைகள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன. மேலும் ஆண்மை சக்தியை  அதிகரிக்க செய்யும் மாத்திரைகள்  தயாரிக்கவும் இது பயன்படுவதாகக் கூறப்படுகிறது.இதனாலேயே செம்மரங்கள் அண்மைக்காலத்தில் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்படுகின்றன. சீனாவில் செம்மரங்கள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

செம்மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஆந்திர அரசு ஈடுபடவேண்டும். இதில் ஈடுபடும் தொழிலாளர்களிடம்  வேறு தொழிலில் ஈடுபடுமாறு போலீஸ்-வனத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி அறிவுறுத்த வேண்டும். அதே சமயம் செம்மரங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, ஆந்திரத்துடன் இணைந்து தமிழக அரசும் உரிய  நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்.

கையில் வண்ணக் கயிறு கட்டும் மிகமோசமான கலாசாரம் தென் மாவட்டங்களில் பரவிக் கொண்டிருக்கிறது...

Written By DevendraKural on Friday, 3 April 2015 | 00:30


சாதிச் சாயமும் அரசியல் பின்னணியும் சென்சார் சர்ச்சையும் பின்னிப் பிணைந்து கொம்பு சீவிவிடப்பட்டிருக்கிறது 'கொம்பன்’ திரைப்படம். புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு, சென்சார் போர்டில் நடந்த சண்டை, 'நண்பேன்டா’ படத்துக்குப் போட்டி என இந்தப் படத்துக்குப் பின்னால் நடந்த விவகாரங்கள் சினிமாவைவிட படு த்ரில். பல தரப்பிலும் பேசி திரட்டப்பட்ட தகவல்கள் இங்கே...
'கொம்பன்’ படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டபோது உறுப்பினர்கள் நல்லி குப்புசாமி, தி.மு.க-வைச் சேர்ந்த விஜயா தாயன்பன், காங்கிரஸ் கட்சியின் எர்னஸ்ட்பால் ஆகியோர் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். எர்னஸ்ட்பால் மட்டும் 'படத்தை வெளியிட்டால் நிறைய பிரச்னைகள் வரும்’ எச்ன சொல்லி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால், படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ரிலீஸுக்குத் தேதி குறித்துவிட்ட நிலையில் சென்சார் சர்டிஃபிகேட் கிடைக்காததால் தயாரிப்புத் தரப்புக்கு பல்ஸ் எகிறிப் போனது. மார்ச் 29-ம் தேதி எஸ்.வி.சேகர் தலைமையில் நடிகை குயிலி, ரேவதி கிருஷ்ணா என ஐந்து பெண் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கொண்ட தணிக்கைக் குழு, மறு தணிக்கைக்காகப் படத்தைப் பார்த்திருக்கிறது.
படத்தில் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே ஆஜர் ஆன டாக்டர் கிருஷ்ணசாமி, படத்தைப் பார்க்க வந்த உறுப்பினர்களிடம் மனு கொடுத்திருக்கிறார். தென் மாவட்டங்களில் நிலவும் பிரச்னைகளையும் படம் வெளியானால் ஏற்படும் பாதிப்பையும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
குறிப்பிட்ட சாதியினர் என்பதை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக கையில் வண்ணக் கயிறு கட்டும் மிகமோசமான கலாசாரம் தென் மாவட்டங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தில் கார்த்தி கையில் பச்சைக் கயிறு கட்டியிருக்கிறார். அவரை எதிர்த்து சண்டை போடுகிறவர்கள் வேறு வண்ணத்தில் கயிறு கட்டியிருக்கின்றனராம். படம் தென் மாவட்டத்தில் நடப்பதால் இந்தப் பிரச்னை எதிரொலிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். படத்தைப் பார்த்த குழு, 25 இடங்களுக்கும் மேல் 'கட்’ கொடுத்ததாம்.
''கொம்பன் பாத்தா பனை மரமும் பொளந்துக்கிட்டு எரியும்'', ''மறவன், கவ்விட்டு வான்னா வெட்டிட்டு வருவான்டா'', ''மறவன் யாருன்னு காட்டுறேன் பாருடா'' போன்ற டயலாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. 'முதுகுளத்தூர்’ போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் படத்தில் நிறைய இடத்தில் வருகிறது. 'முதுகுளத்தூர்’ ஊர் பெயர் தொடர்பான போர்டுகளை காட்டக் கூடாது எனவும் சொல்லியதாம் சென்சார் போர்டு. ''இது முழுக்க முழுக்கக் கற்பனை கதை. இதை சாதி சாயலில் பார்க்காதீர்கள். எந்த இடத்திலும் சாதியை முன் வைக்கவில்லை'' என்று படக்குழு சொல்லியிருக்கிறது. 'கொம்பன்’ தலைப்புக்கும் சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்ததாம். கடைசியில் 'கொ’ என மாற்றிக்கொள்கிறோம் என்றார்களாம். ''படம் ரிலீஸுக்குத் தேதி குறித்துவிட்டோம். சென்சார் அனுமதி கிடைக்கவில்லை எனில், நிறைய நஷ்டம் ஏற்படும் என்று சொல்லியிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. படத்தில் படிக்காசு என்ற பெயரில் ஒரு கேரக்டர் வருகிறது. படிக்காசு பெயரையும் தூக்கச் சொல்லிவிட்டார்கள். ''படிக்காசு கடன் கொடுத்தால் விடமாட்டான். படுக்கக் கூப்பிடுவான்'' என்கிற வசனத்துக்கும் கட் விழுந்திருக்கிறது.
இந்த வாக்குவாதங்கள் நடக்கும்போது ஒரு கட்டத்தில் வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்திருக்கின்றன. ''தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடக்கவில்லை. தி.மு.க ஆட்சிதான் நடக்கிறது'' என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கோபத்தோடு சொல்லியிருக்கிறார். ''தமிழகத்தில் இல்லை, இந்தியாவிலேயே
பி.ஜே.பி ஆட்சிதான் நடக்கிறது'' என்று எஸ்.வி.சேகர் சொல்ல.... ''ஸ்டாலினுக்காக இந்தப் படத்தை...'' என்று ஞானவேல்ராஜா சொல்ல வர.... ''அரசியல் பேசாதீங்க. எதுவாக இருந்தாலும் எழுதிக் கொடுங்கள்'' எனச் சொல்லியிருக்கிறது சென்சார் போர்டு.
அதாவது உதயநிதி நடிக்கும் 'நண்பேன்டா’ படம் ரிலீஸ் ஆகப் போகிறது. அதேநாளில் 'கொம்பன்’ ரிலீஸ் ஆகக் கூடாது என்பதால்தான், இப்படி தடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்களாம்.
இந்த விவகாரம் பற்றி படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரிடம் பேச முயற்சி செய்தோம். பேசுவதைத் தவிர்த்தனர்.
படத்தின் கதை என்ன?
கோவை சரளாவால் வளர்க்கப்பட்ட மகன் கார்த்தியும் ராஜ்கிரணால் வளர்க்கப்பட்ட லட்சுமி மேனனும் காதலிக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம்தான் படத்தின் கதைக் களம். ஆப்ப நாட்டில் ஆடு வியாபாரம் செய்யும் கார்த்தி, அடிதடி பேர்வழி. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது, வெட்டுவது என கார்த்தி மீது ஏகப்பட்ட வழக்குகள். தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் லட்சுமி மேனனை காதலித்து மணமுடிக்கிறார். ராஜ்கிரணுக்கும் கார்த்திக்கும் மோதல் ஏற்படுகிறது. ஆப்பநாடு, வல்லநாடு என 18 பட்டிக்கும் யார் தலைவன் ஆவது என்கிற பிரச்னையும் படத்தில் வருகிறது. இன்னொரு தரப்பு ஆப்ப நாட்டுக்குத் தலைவனாக வர முயற்சி செய்கிறது. இந்தப் போராட்டத்தில் லட்சுமி மேனனைக் கடத்துகிறார்கள். லட்சுமி மேனனை மீட்க ராஜ்கிரண், கார்த்தி இருவரும் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் ராஜ்கிரணை வெட்ட வந்தவர்களை வெட்டி வீசுகிறார் கார்த்தி. கடைசியில் மாமனாருக்கு மரியாதை செலுத்துவதோடு கதை முடிகிறது.
அரசியல் பின்னணி கொம்பனுக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார்?
''குறிப்​பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி வசனங்​கள் வைத்திருக்கிறார்கள். பாடல் வரிகளும் வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கின்றன. படம் வெளியானால் தென் மாவட்டங்களில் மீண்டும் சாதிய மோதல்கள் உருவாகும். 'கொம்பன்’ வீண் வம்பை விலைக்கு வாங்கும் முயற்சி'' என்கிறார்.
சென்னை மண்டல சென்ஸார் போர்டு அதிகாரி பக்கிரிசாமியிடம் பேசினோம். ''கிருஷ்ணசாமி ஏற்கெனவே மனுக் கொடுத்திருக்கிறார். அது உறுப்பினர்களுக்கு படித்துக் காட்டப்பட்டுவிட்டது. சென்சார் தொடர்பான சட்டமும் விதிகளும்தான் எங்களின் வேதப் புத்தகம். அதன் அடிப்படையில்தான் திரைப்படம் சென்சார் செய்யப்படுகிறது. தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கு எல்லாம் இதில் இடமில்லை. எனக்குக் கொம்பனும் ஒன்றுதான், அம்பனும் ஒன்றுதான்'' என்று முடித்துக்கொண்டார்.
கொம்பன் விவகாரத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், கிருஷ்ணசாமிக்கு எதிராகச் சீறியிருக்கிறார். '' 'கொம்பன்’ படம் நின்றுவிட்டால், அதன் பிறகு தென் மாவட்டத்தில் எந்தச் சாதிக் கலவரமோ கொலைகளோ நடக்காது; அப்படி நடந்தால் நானே பொறுப்பு என கிருஷ்ணசாமியால் உறுதி ஏற்க முடியுமா?'' என்று சீறியிருக்கிறார்.
படம் காட்டுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சாதியும் சாதிப் பெருமையும்தானா கிடைத்தது? கலை என்பது மக்களின் மனவேறுபாடுகளை அகற்றி ஒருமுகப்படுத்தும் விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, விஷமாக மாறிவிடக் கூடாது!
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

''இது ஆரோக்கியமானது அல்ல!''
பேராசிரியர் அ.மார்க்ஸ்: கிராமங்களில் சாதி ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பது யதார்த்தம். அதை சினிமாவில் எப்படிக் காட்டுகிறோம் என்பதுதான் கேள்வி. குறிப்பிட்ட மாவட்டம், குறிப்பிட்ட தெரு, குறிப்பிட்ட சாதி என்று சொல்ல வரும்போதுதான், குறிப்பிட்ட சாதியினருக்கான சென்சிட்டீவான பிரச்னைகளும் வெடிக்க ஆரம்பிக்கின்றன. ஒரு நாவலில் சொல்வதைவிட, அதிக விளைவை சினிமா ஏற்படுத்தும்.  அதிலும் பிரபலமான ஒரு நடிகர் அதைச் சொல்லும்போது மிகவும் பொறுப்புணர்வுடன் சொல்ல வேண்டியது அவசியம். ஒடுக்கப்பட்ட சாதியினரை சீண்டும் விதமாக அந்தப் படத்தில் காட்சிகள் இருந்தால் அது கண்டிக்கத் தக்கது.
கவிஞர் மனுஷ்ய புத்திரன்: தமிழ் சினிமாக்கள் வட்டாரப் பண்பாட்டை சித்திரிக்கும் நோக்கில் சொல்லப்படும்போது அதில் சாதியக் கூறுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், அது சமூகத்தில் பிரச்னையை உருவாக்குமா என்பது படம் வெளியான பின்புதான் தெரியும். 'ஒரு திரைப்படம் வெளியாகும் நேரத்தில் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.  படம் சாதிய ஒடுக்குமுறையை ஆதரிப்பதாக இருந்தால் அதை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளலாம். இது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்றுதான் நான் பார்க்கிறேன்.
தமிழ்மகன்                        

லீ’டர்…!இப்படியொரு தலைவர் இந்த மண்ணில் சாத்தியமா?

Written By DevendraKural on Sunday, 29 March 2015 | 03:54

லகத்தையே தன் நாட்டை நோக்கித்திரும்பிப் பார்க்க வைத்த தலைவர் அவர். ஆனாலும் அவரது சொந்த நாட்டில் அவர் பேசியதைக்கேட்டபோது ஆரம்பத்தில் பலரும் கேலியாக சிரிக்கத்தான் செய்தார்கள். 

“உம்மென்று இருக்காதீங்க. எப்போதும் சிரிச்ச முகமா இருங்க. நல்லா இங்கிலீஷ் பேசக் கத்துக்குங்க. கக்கூஸ்களை சுத்தப்படுத்தி வச்சிக்குங்க. அப்புறம், ரோட்டில் எச்சில் துப்பாதீங்க. சூயிங்கத்தை மென்று கண்ட இடங்களில் துப்பாதீங்க. மாடியிலிருந்து குப்பை கொட்டாதீங்க”– இப்படி அவர் சொன்னதற்குத் தான் சிரித்தார்கள். அவர் கவலைப் படவில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தார். தான் நினைத்ததை நிறைவேற்றி வெற்றிப் புன்னகையை வெளிப்படுத்தும் காலம் நிச்சயம் வரும் என்று நம்பினார். அதற்கேற்றபடி செயல்பட்டார். குப்பை நிறைந்த குடிசைப் பகுதிகளிலும் தெருக்களிலும் அவரே துடைப்பம் எடுத்துப் பெருக்கினார். அவரது நம்பிக்கை சில ஆண்டுகளிலேயே நிறைவேறியது.
உலக நாடுகள் பலவும் அந்த நாட்டைப் போல நம் நாடு சுத்தமாக வேண்டும். அதுபோல நம் நாடு வேகமாக வளரவேண்டும். சாலைகளும் பாலங்களும் கட்டடங்களும் அந்த நாடு போல அமைய வேண்டும். வணிகத்துறையில் அதுபோலஉயரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டுக்குக் கிடைத்தது போல ஒரு தலைவர் நமக்குக் கிடைக்க வேண்டும் என விரும்பியது. நினைத்ததை சாதித்த வெற்றிப் பெருமிதத்துடன் புன்னகைத்தார் அவர்.


அந்தஅவர்… சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ  குவான் யூ.


91 வயதில் 23-3-2015 அன்று லீ குவான் யூ இறந்தபோது, முதுமையில் ஏற்படக்கூடிய இயற்கையான மரணம் தானே என்று சிங்கப்பூர்வாசிகள் நினைக்கவில்லை. தங்களின் ஒப்பற்ற தலைவர் இனி திரும்ப முடியாத இடத்திற்குப் போய்விட்டாரே என்று தான் கலங்கினார்கள். கண்ணீர் விட்டார்கள். சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்த துயரத்தில் இருந்தனர். அவர்களின் உறவினர்கள் பலர் வாழும் தமிழகத்தின் தஞ்சை-திருவாரூர்-நாகை மாவட்டங்களில் ‘இமயம் சரிந்தது’ என்ற துயர பதாகைகள் லீ குவான் யூ படத்துடன் பல இடங்களிலும் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். (அவர்களில் பலரும் முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து  சொந்த மண்ணுக்குத் திரும்பியவர்கள்)

சிங்கப்பூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர், “பிரதமராக இருந்த அவருக்கு என்ன சட்டமோ, என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கும் அதே சட்டம்தான். வேறுபாடு எதுவும் கிடையாது. மிகப்பெரிய ஜனநாயக நாடுன்னு சொல்லிக்கிற நம்ம இந்தியாவில் இப்படி கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா?” என்றார் வேதனையும் ஆதங்கமுமாக. சிங்கப்பூர் மண்ணில் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் லீ குவான்யூ தந்த முக்கியத்துவம் பற்றிய செய்திகள்  தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகிக் கொண்டிருக்க, ”அவரைப் போல நமக்கு ஒரு தலைவர் எப்போது கிடைப்பார்? நம் நாடு எப்போது சிங்கப்பூரைப் போல மாறும்?” என்று இங்குள்ள பலரும் தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தத்  தொடங்கி விட்டார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள போதும் தமிழ் மொழிக்கு ஆட்சி மொழித் தகுதி கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ் அமைய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும் ஆண்டுக்கணக்கில் அது நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி மாளிகையிலும் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சிங்கப்பூரின் ஆட்சி நிர்வாகத்தில் தமிழுக்குரிய உரிமைகளை லீ வழங்கினார். அங்குள்ள அரசு வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தந்தார். நாட்டை முன்னேற்றும் தனது இலட்சியத்திற்குத் துணை நின்றதில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்பதை அவர் மறக்கவில்லை. அதுபோலவே சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு உதவிய மற்ற நாட்டவர்களுக்கும் லீ மதிப்பளித்தார்.

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய கொடுந்தாக்கு தலைத் தடுத்து நிறுத்தும்படி அன்றைய இந்திய அரசிடம் தமிழகக் கட்சிகள் வலியுறுத்தியபோதும் அது அசைந்து கொடுக்கவில்லை. இப்போதுள்ள இந்திய அரசும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. போரின் போது இலங்கையில் நடந்த இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் இன்றுவரை இந்தியா புறந்தள்ளியே வருகிறது. ஆனால் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். “அறிவுக்கூர்மையும் உழைப்பும் நிறைந்த ஈழத்தமிழர்களின் வளர்ச்சி கண்டு சிங்களர்கள் பொறாமைப்படுவதன் விளைவுதான் இலங்கையில் உள்ள நிலைமைகளுக்குக் காரணம்” என்று சொன்னதுடன், இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவின் சர்வாதிகாரப் போக்கையும் வன்மையாகக் கண்டித்தார். தமிழர்களுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமல்ல என்றும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவருவார்கள் என்றும் தெரிவித்தார்.

        லீயின் மூதாதையர்கள் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடுத்தர  குடும்பத்தினர். சிங்கப்பூரில் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் லீ பிறந்தார். 1954ஆம் ஆண்டில் மக்கள் செயல்பாட்டுக் கட்சியைத் (People’s Action Party  PAP) தன்னைப் போன்ற ஆங்கிலமறிந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுர்களுடன் சேர்ந்து தொடங்கினார். கம்யூனிச ஆதரவு தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த சிங்கப்பூரில் 1959ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் லீயின் மக்கள் செயல்பாட்டுக் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து அந்நாட்டுக்கு சுயாட்சி கிடைத்தது. சிங்கப்பூரின் முதல் பிரதமரானார் லீ குவான் யூ..

         “கடலில் உள்ள பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்கிவிடும். சின்ன மீன்களோ இறால் போன்றவற்றை விழுங்கும். உலக நாடுகளின் நிலையும் இதுதான். சின்ன நாடுகளின் பாதுகாப்புக்கான சர்வதேசசட்டம் எதுவும் இல்லாத நிலையில், சிங்கப்பூர் போன்ற சின்ன நாடு தனித்து செயல்பட்டு வளர்ச்சியடைய முடியாது” என நினைத்தார் லீ. மலேயா, சிங்கப்பூர், வட புருனே ஆகியவை இணைந்தமலேசியா கூட்டமைப்பு 1963ல் உருவாக்கப்பட்டது. ஆனால், லீ நினைத்த வளர்ச்சியை சிங்கப்பூர்பெற முடியவில்லை. அதனால் வருத்தத்துடன் மலேசியா கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை தனது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது சிங்கப்பூர்.

1965ல் சிங்கப்பூர் இறையாண்மை மிக்க குடியரசு நாடானது. அதிலிருந்து கடந்த 50 ஆண்டுகளில் வணிகத்திலும் அதற்கான உள்கட்டமைப்புகளிலும், மக்கள் வசதிக்கான அடிப்படைக் கட்டமைப்புகளிலும், சுற்றுலாத்துறையிலும் சிங்கப்பூர் பெற்ற மகத்தான வளர்ச்சியையும் அதன் பொருளாதார வளத்தையும் தான் உலக நாடுகள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றன. இந்தியர்களின் பார்வையும் அப்படித்தான் இருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவைப் பற்றிய லீயின் பார்வை எப்படிப்பட்டது?
“உண்மையில் இந்தியா ஒற்றை நாடு அல்ல. 32 தனித்தனி நாடுகளை பிரிட்டிஷார் போட்ட ரயில் பாதை ஒன்றிணைத்து வைத்திருக்கிறது” என்பதே இந்தியா பற்றிய லீயின் பார்வை. நம் நாட்டிலுள்ள சாதிப்பிரிவுகள், மொழி  வேறுபாடு, பரப்பளவு, பன்முகத்தன்மை பற்றியும்லீ அறிந்திருந்தார். இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் தலைமையும் அதன் கீழான நிர்வாகமும் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என்பது லீயின் கருத்து. இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை ஜனநாயகப் படுகொலை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.லீ அதனை இந்தியாவில் ஒழுங்கைக் கொண்டு வர இந்திரா எடுத்த முயற்சியாகப் பார்த்தார். ஜனநாயகம்-சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்றத்தனம் வளர்வதை லீ விரும்பியதில்லை. அதனை சிங்கப்பூரில் அவர் அனுமதித்ததும் இல்லை.

கருத்துசுதந்திரம், ஊடக செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது அவர்கட்டுப்பாடுகளை விதித்தார். மக்களின் வசதிக்காகத் தான் சட்டங்கள் என்பதைவிட சட்டத்தை முறையாக செயல்படுத்தினால் தான் மக்கள் நலனுக்கானத் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதில் லீ உறுதியாக இருந்தார். சாலையில் குப்பை போட்டால் அபராதம் என்பதில் தொடங்கி குற்றங்களுக்கானக் கடுமையான தண்டனை வரை அனைத்தையும் அவரது ஆட்சி தயவு தாட்சண்யமின்றி நடைமுறைப்படுத்தியது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை சிங்கப்பூர் அரசு நிலைநிறுத்தியது. சிங்கப்பூர் மாடல் என்பது இந்திய மாடலுக்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கே பொடா, தடா சட்டங்கள் ஆள்வோர்களால் எப்படி செயல்படுத்தப்பட்டன என்பதைமறக்க முடியாது.


அரசியல் கட்சியில் சேரும் பொழுதே இன்னின்ன பதவிகளைப் பெற்று இத்தனை ஆண்டுகளில் இந்தளவு சம்பாதித்துவிடலாம் என்ற கணக்குடன் தான் இந்தியாவில் பலரும் செயல்படுகிறார்கள். லீ தனது கட்சிக்காரர்கள் எப்படி மக்கள் நலப் பணிகளில் செயல்படுகிறார்கள் கவனித்து அதன் பின் பொறுப்புகளை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என ஒவ்வொரு கட்டத் தேர்வின் போதும் அவர் கவனமாக இருந்தார். அதனால் தான் ஆசியக் கண்டத்திலேயே ஊழல் குறைவான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர்சிறப்பு பெற்றிருக்கிறது.

31 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருந்த லீ, தனது முதுமையின் காரணமாக பதவி விலகினார். பின்னர், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும், அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கினார். இப்போது சிங்கப்பூரின் பிரதமராக இருப்பவர் லீயின் மகன் லீ சின் லூங் (Lee Hsien Loong). குடும்பத்தினரில் வேறு சிலரும் பொறுப்புகளில் இருக்கிறார்கள். ஆனால் அவரவரும் அதற்குரிய தகுதிகளோடும் அனுபவங்களோடும் ஆண்டுக்கணக்கானப் பயிற்சிகளுக்குப் பிறகு அந்த இடங்களை அடைந்துள்ளனர். லீயினால் சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சி எல்லோராலும் பாராட்டப்படும் அதேவேளையில், அவரது அரசியல்-நிர்வாகக் கொள்கைகள் உலகத்தின் பார்வையில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் கலந்தே பெற்று வந்தன.   


தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையைவிட குறைவான எண்ணிக்கையில் மக்கள் உள்ள சிங்கப்பூர் போன்ற சிறியநாட்டில் ஏறத்தாழ ஒற்றையாட்சி முறையிலான சர்வாதிகாரம் தொனிக்கும் ஜனநாயகத் தன்மை கொண்ட நிர்வாகத்தால் எதிர்பார்த்த வளர்ச்சியையும் அதற்கு மேலேயும் அடைய முடியும். இந்தியா போன்ற 120 கோடி மக்கள் தொகை கொண்ட  பல்வேறு தேசிய இனங்களும் மதத்தவரும் வாழும் நாட்டை சிங்கப்பூர் ஆக்குவது அத்தனை எளிதல்ல. முழுமையான சர்வாதிகார ஆட்சியில் வேண்டுமானால் அது சாத்தியமாகலாம். ஆனால், அப்படியொரு சர்வாதிகாரம் உருவானால் இந்தியா ஒரே நாடாக இருக்குமா, லீ சொன்னது போல பிரிட்டிஷாரின் ரயில் தண்டவாளத்தால் இணைக்கப்பட்ட 32 நாடுகளும் தனித்தனியாகுமா என்பதும் சிந்திக்க வேண்டியதாகும்.

ஒருவேளை, 32 தனித்தனி நாடுகளில் ஒன்றாக தமிழகம் உருவானால், இங்கே ஒரு  லீ கிடைப்பாரா? ஓட்டுக்குப் பணம், சட்டத்தை மதிக்காமல் அதில்  உள்ள சந்து பொந்துகளை மட்டுமே பயன்படுத்துதல், உள்ளொன்று வைத்து  புறமொன்று செயல்படுதல், போலித்தனமான நடத்தைகள், லஞ்ச-ஊழலுக்கு நியாயம் கற்பித்தல்,  இவையனைத்தும் தலைமைகளிடம் மட்டுமின்றி மக்களின் மனநிலையிலும் நிறைந்துள்ள  மண்ணில்  ஒரு லீ குவான் யூ உருவாக வேண்டிய கட்டாயம் நிறையவே உள்ளது. ஆனால், அந்த லீ தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவாரா அல்லது இங்குள்ள அரசியல் சூழலும் மக்களின் மனநிலையும் லீயை மாற்றிவிடுமா என்பதைத்தான் கணிக்க முடியவில்லை. எதையும் முன்கூட்டியே கணித்து ஒரு முடிவு செய்துவிடாதீர்கள் என்பதும் சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீயின் கூற்று.

“ஒரு மனிதனின் சவப்பெட்டி மீது ஆணி அடிக்கப்படும்வரை அவனைப் பற்றிய இறுதி முடிவுக்கு வராதீர்கள். சவப்பெட்டி மூடப்பட்ட பிறகு முடிவு செய்யுங்கள். அதன் பின் அந்த மனிதனை மதிப்பீடு செய்யுங்கள். என்னுடைய சவப்பெட்டி மூடப்படுவதற்கு முன்னால் நான்கூட ஏதேனும் முட்டாள்த்தனமான காரியத்தை செய்யக்கூடும்” – லீ குவான் யூ.

(தகவல் உதவி- The New York Times, The Guardian, The Hindu, The Times of India, Reuters)

தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய பிரதிநிதிகள்

ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்.
இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னனி இயக்குநர் கௌதமன் பலத்த சிரமத்தின் மத்தியில் இயக்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIONAL” என்ற அமைப்பின் சார்பாக மாநாடு இடம்பெற்றது.
இம்மாநாடு OCAPROCE INTERNATIONAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான செல்லத்துரை ரஜனி, தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு.மணிவண்ணன், உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி. அங்கயக்கன்னி, செல்வி உமாசங்கரி நெடுமாறன் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டிலேயே இனவழிப்புத் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ரத்த சகதியில் தென் தமிழகம்!

Written By DevendraKural on Saturday, 28 March 2015 | 14:06


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மறுபடியும் ரத்தச் சகதியில் மிதக்கின்றன. கடந்த ஏழு மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் நடந்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை 100; தூத்துக்குடியில் 70. ஒவ்வொரு நாளும் கொலையோடுதான் விடிகிறது. தென் தமிழக மாவட்டங்களில் பதற்றநிலை பரவிக்கொண்டிருக்கிறது. 
நடந்திருக்கும் கொலைகளில் சரி பாதிக்குக் காரணம்... சாதி. ஆனால், அந்தக் காரணங்கள் அனைத்தும் மிக அற்பமானவை. நாங்குனேரி அருகே இருக்கிறது பானாங்குளம், கரந்தநேரி ஆகிய இரு கிராமங்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பானாங்குளத்தைச் சேர்ந்த இரண்டு பேர் டி.வி பழுதுபார்க்க கரந்தநேரிக்குச் சென்றுள்ளனர். இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதாகவும், கரந்தநேரியைச் சேர்ந்தவர்கள் இதைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த வாய்த் தகராறு, அடிதடியானது. இரு ஊர்களிலும் வசிப்பது வேறு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தச் சில்லறைத் தகராறு, ஊர்ப் பகையாக மூண்டது. விளைவு... பானாங்குளத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, ஊர் எல்லையில் உள்ள ரயில்வே கேட் ஓரத்தில் மறைந்துகொண்டு, கரந்தநேரியைச் சேர்ந்த யார் அந்தப் பக்கமாக வந்தாலும் வெட்டியது. வேல்சாமி என்கிற கட்டடத் தொழிலாளி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இரவில் வண்டியில் வீடு திரும்பிய ஜெயப்பிரகாஷை வளைத்துப் பிடித்து வெட்ட... ரத்தம் சொட்டியபடி அவர் தப்பி ஓடினார். கணேசன் என்பவர் வெட்டப்பட்டு கீழே சரிய... அடுத்து வந்த மாரிக்கனி என்பவரைக் கழுத்தை அறுத்துக் கொன்றது அந்தக் கும்பல். அடுத்த நாள் அவரது தலை இல்லாத உடல் ஓர் இடத்திலும், தலை வேறு ஓர் இடத்திலும் கண்டறியப்பட்டன. இப்படியாக இரண்டு பேர் உயிரைப் பறித்து... இரண்டு பேரைக் குற்றுயிராகப் போட்டுச் சென்றார்கள். சில வாரங்கள் கழித்து, இதற்குப் பழிக்குப்பழியாக... பானாங்குளத்தைச் சேர்ந்த கொம்பையா என்பவரின் உணவு விடுதியைச் சூறையாடி... அவரை வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றது ஒரு கும்பல்.
வள்ளியூர் பக்கம் நம்பியான் விளைக்காரர் டேவிட் ராஜா, ஒரு  பொறியியல் மாணவர். பைக்கில் கல்லூரிக்குச் சென்ற இவரை, பின்னாலேயே இரண்டு வண்டிகளில் துரத்திச் சென்ற கும்பல் மறித்து நிறுத்தி வெட்டிக்கொன்றது. ஏழு பேர் இந்த விவகாரத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் பயங்கரம்... 'பள்ளியில் படிக்கும் போதிருந்தே எங்களுக்குள் பிரச்னை. டேவிட் ராஜா நண்பர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி சண்டை வரும். டேவிட் ராஜா எங்கள் பகுதிக்கு வந்து எங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சைட் அடித்தார். இது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை எச்சரித்தபோது, அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து எங்களை அடித்து உதைத்தனர். இதற்குப் பழிவாங்கு வதற்காகத்தான் கொலை செய்தோம்’ என்பது அவர்களின் வாக்குமூலத்தின் சாரம். பள்ளிக்கூட தகராறு படுகொலை வரை போயிருக்கிறது.
உண்மையில் இப்போது நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடந்து கொண்டிருப்பவை 'நம்பர் கொலைகள்’. யார் பக்கம் அதிகம் உயிர் சேதம் ஆகிறது என்பதுதான் போட்டி. கொலை செய்பவர்களுக்கும் கொலை செய்யப்படுபவர்களுக்கும் எந்தவிதமான முன்விரோதமோ, முன் அறிமுகமோ கிடையாது. பெயர்கூடத் தெரியாது. குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்; குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற காரணங்களே, கொலை செய்வதற்குப் போதும்.
நாங்குனேரி அருகே ஆடு மேய்க்கும் பெரியவரைக் கொலை செய்தது இப்படித்தான். இப்போது இந்தப் பகுதி கிராம மக்கள், வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவுக்குப் பதற்றமான சூழல். பானாங்குளத்திலும் கரந்தநேரியிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் போலீஸ் பாதுகாப்புடன்தான் தேர்வு எழுதுகின்றனர். திருமணங்கள், போலீஸ் பாதுகாப்புடன்தான் நடைபெறுகின்றன.
காரணமற்ற கொலைகள்!
சாத்தான்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்கிற 56 வயது பெரியவர், ஏதோ வேலையாக தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். தாகமாக இருக்கிறதே என ஒரு வீட்டின் கதவைத் தட்டி, தண்ணீர் கேட்டிருக்கிறார். அவரை திருடன் என நினைத்து வீட்டில் உள்ளவர்கள் அடிக்க, மயங்கிச் சரிந்து மரணம் அடைந்தார். தாகத்துக்குத் தண்ணீர் கேட்டது ஒரு குற்றமா? திருடன் என நினைத்து அடித்தாலும்கூட சாகும் அளவுக்கா அடிப்பார்கள்? அந்தப் பெரியவருக்கும் அடித்தவர்களுக்குமான அறிமுகம் சில நிமிடங்கள்கூட இருக்காது. அவர்களால் இவரது உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. இதைவிடக் கொடூரமானது கீழே உள்ள சம்பவம்.
சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியைச் சேர்ந்தவர் செல்வா. 25 வயது இளைஞரான இவர், தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர். கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி பேருந்து புறப்பட்டது. அங்கு ஏறிய நான்கு பேர் குடிபோதையில், பேருந்தின் படியில் தொங்கிக்கொண்டு வந்தனர். 'போதையில் கீழே விழுந்து செத்துத் தொலைத்தால், நம்ம உயிரைப் எடுப்பார்களே’ என நினைத்த செல்வா, அவர்களை உள்ளே வருமாறு எச்சரித்தார். அவர்கள் மறுக்க... பேருந்தை நிறுத்தி நான்கு பேரையும் இறக்கிவிட்டுவிட்டுக் கிளம்பினார். இறங்கிய நான்கு பேரும் வெறிகொண்ட நிலையில் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் சென்று பாட்டில் நிறைய பெட்ரோல் வாங்கினார்கள். ஒரு ஆட்டோவைப் பிடித்து பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்குச் சென்றார்கள். அங்கு நடத்துனர் செல்வா, பயணிகளை இறக்கிவிட்டு அடுத்த ட்ரிப் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தார். அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். பட்டப்பகலில், ஒரு பேருந்து நிலையத்தின் மையத்தில் உடல் எங்கும் தீ பற்றித் துடித்துக் கதறினார் செல்வா. அருகில் இருந்த கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர் என்றாலும் அவரது உடலின் முக்கால்வாசி பகுதி எரிந்துவிட்டது.
இப்படி, இதற்குத்தான் என கணக்கு வழக்கு ஏதும் இல்லாமல், கொலைகள் விழுகின்றன. இப்படி கொலைகள் செய்வோரை, ஊரும் உறவுகளும் கைவிடுவதும் இல்லை; பழிச்சொல் கூறுவதும் இல்லை. மாறாக, அரவணைக்கின்றனர்; பாதுகாக்கின்றனர். பல கொலைகளில் சம்பந்தப்பட்ட சாதிச் சங்கத் தலைவர்கள் உடனடியாக நேரில் வந்து ஆறுதல் சொல்வதன் பெயரால், தூபம் போடுகின்றனர்; குற்றவாளிகளைக் காவல் துறையிடம் இருந்து பாதுகாக்கின்றனர்.
காவல் துறை என்ன செய்கிறது?
எஸ்.பி-யை மாற்றுவது, ஏட்டய்யாவை மாற்றுவது என காவல் துறை தன்னால் முடிந்ததை செய்துதான் பார்க்கிறது. ஆனால், கொலைகள் குறைந்தபாடு இல்லை.
''பல கொலைகளுக்கு, காவல் துறைதான் உடந்தையாக இருக்கிறது. கொலையாளி தன் சாதியைச் சேர்ந்தவன் என்றால், பாதுகாக்கிறது. இந்தப் பகுதியின் காவல் நிலையங்களில் அதிகபட்சம் இருப்பது பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த போலீஸார்தான். அவர்கள் காக்கிச் சட்டை அணிந்திருந்தாலும், உள்ளே சாதி வெறியர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சாதி வெறியர்களுக்கு சல்யூட் அடிக்கிறார்கள். மேல்நிலை அதிகாரிகளை அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்வதைப்போல, அடிமட்ட காவலர்களையும் அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அப்போதுதான் இது குறையும்'' என்கிறார், மனித உரிமை மீறல்கள் குறித்த இலவசச் சட்ட உதவி மையத்தின் அமைப்பாளரான வழக்குரைஞர் கிரிநிவாச பிரசாத்.
ஓர் ஊரில் சாதிப் பிரச்னை நடக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அதிகாரியையே அங்கே அனுப்பி நிலைமையைச் சமாளிப்பதை ஒரு டெக்னிக்காக காவல் துறை பின்பற்றுகிறது. முள்ளை முள்ளாலேயே எடுக்கிறார்களாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் சாதிப்பற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் இந்தப் போக்கு, அந்த நேரத்துப் பதற்றத்தைத் தற்காலிமாகத் தணிக்கலாம். ஆனால், அது ஊரின் சாதிப் பகையை இன்னும் இன்னும் இறுக்கமாக்கி, மேலும் மோசமாக்கவே உதவும்.
அதிகரிக்கும் சாதிவெறி
மின்சாரக் கம்பத்தில் அவரவர் சாதிக் கட்சியின் நிறத்தை வரைந்து வைக்கிறார்கள். அதில் அடுத்த தெரு நாய் சிறுநீர் கழித்தாலே, விவகாரமாகி தகராறு, கைகலப்பு, கத்திக்குத்து. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஃபேஸ்புக்கில் தன் சாதிக்கு எனத் தனித்தனி குழுக்கள் தொடங்கி, அதில் 'ஆண்ட பரம்பரை’ பெருமை பேசுகிறார்கள்; மற்ற சாதியினருக்குச் சவால்விடுகின்றனர். பள்ளிகளுக்கு தன் சாதிக் கட்சியின் நிறத்தில் கயிறு அணிந்து செல்கிறார்கள் மாணவர்கள். கையில் இன்ன நிறக் கயிறு அணிந்தால், அவன் இன்ன சாதிக்காரப் பையன் என அடையாளமாம். அரசியல் ஆட்கள், அவரவர் தலைவர் / தலைவியின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதுபோல, இது ஓர் அடையாளம்.
''பயங்கர விளைவுகளை, விபரீதங்களை உண்டாக்கும் சாதி உணர்வு, இப்படி பள்ளி - கல்லூரிகளிலேயே வளர்க்கப்படுவது வேதனையானது. சில ஆசிரியர்கள் அவர்கள் செய்யும் தவறுக்காகத் தண்டிக்கப்படும்போது, மாணவர்களை சாதியரீதியில் தூண்டிவிட்டுத் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். சாதி அடிப்படையில் அணி திரளும் மாணவர்களை சாதிய அமைப்புகள் எளிதாகக் கையில் எடுத்துக்கொள்கின்றன. 'அவ்வளவு பெரிய தலைவர் தன்னிடம் நெருக்கமாக இருக்கிறாரே’ என்கிற மனநிலையில் மாணவர்கள் இதை ஒரு ஹீரோயிசமாக கருதிக்கொள்கின்றனர்'' என்கிறார் வழக்குரைஞர் பிரம்மா.
வீட்டின் நல்லது - கெட்டதுக்கு உள்ளூர் கேபிள் டி.வி-யில் விளம்பரம் தந்தால், அதில், தன் சாதியின் பெருமையைப் பேசும் சினிமா பாடலை ஒலிபரப்புகின்றனர். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பாடல் தேசியகீதம்போல இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு சாதியினரும் தங்கள் வீட்டின் காதுகுத்து, திருமணத்துக்கு போஸ்டர் அடிக்கும்போது, தன் சாதியைச் சேர்ந்த நடிகரின் புகைப்படத்தைத் தவறாமல் அதில் அச்சிடுகின்றனர். இவர்கள் அச்சடிப்பதைப் பார்த்துதான், இன்ன நடிகர் இன்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதே நமக்கு தெரியவரும். அந்த அளவுக்கு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக சாதி பார்க்கின்றனர்.
தீர்வுதான் என்ன?
தென் மாவட்டக் கொலைகளுக்கு, வெறுமனே சட்டம்-ஒழுங்குப் பிரச்னை மட்டும் காரணம் அல்ல; வலுவான சமூகக் காரணங்களும் இருக்கின்றன. அவை வெளிப்படை யாகவும் இருக்கின்றன. இதைத் தீர்க்க, நீண்டகால நோக்கில் உடனடியாகச் செயலாற்ற வேண்டும். பள்ளி - கல்லூரிகள் தொடங்கி, சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து சாதியைத் துண்டிக்கவும் அப்புறப்படுத்தவும் வேண்டும். காவல் துறையின் சாதி அதிகாரிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான கொலைகளில் குற்றவாளிகள் குடிபோதையில் இருப்பதை அவர்களின் வாக்குமூலங்கள் உறுதிப்படுத்து கின்றன. குடிபோதை, ஒரு மனித உயிரை வெட்டிச் சாய்க்கும் இரக்கமின்மையை அவர்களுக்கு வழங்குகிறது. மொத்த மாநிலமும் போதையின் பிடியில் வீழ்ந்து வெட்டிக்கொண்டு சாவதற்கு முன்பு மதுக்கடைகள் என்னும் எமனை மூடுவதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவற்றுக்கு இணை செயல்பாடாக... இந்தப் பகுதியின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். தென் மாவட்டக் கலவரங்கள் குறித்து ஆய்வுசெய்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன் கமிஷன், புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தீர்வாகப் பரிந்துரைத்தது. ஆனால், நாங்குனேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா இதுவரை அறிவிப்பாகவே இருக்கிறது. கங்கைகொண்டானில் அவசரகதியில் தொடங்கப்பட்ட தொழில்நுட்பப் பூங்காவும் எந்தப் பலனையும் தரவில்லை. தூத்துக்குடியில் திரும்பிய பக்கம் எல்லாம் தொழிற்சாலைகள் இருந்தாலும், அவை உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தரவில்லை. இந்தச் சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அனைத்துத் திசைகளில் இருந்தும் தீர்வை முன்னெடுக்க வேண்டும்.
சாதியும் வெறுப்பும் நீக்கப்பட்ட நாகரிகமான சமூக வாழ்க்கை, நிம்மதியான அன்றாட வாழ்க்கை... இரண்டும்தான் தென் மாவட்டங்களின் உடனடித் தேவை. இதைச் செய்ய வேண்டியது பொறுப்புள்ள ஓர் அரசின் கடமை!  

பள்ளர் சிறுமிகள் விளையாடும் பாண்டி ஆட்டம் !

Image result for நொண்டி“பாண்டி” என்றால் “பாத்தி” அல்லது “வயல்” என்று பொருள்.பாண்டியர் என்றால் உழவர் என்று பொருள்.பாண்டிய நாடு என்றால் வயல் நாடு என்று பொருள். பாண்டி விளையாட்டு என ஒரு விளையாட்டை பள்ளர் சிறுமிகள் விளையாடுவார்கள். சதுர வடிவிலான பாத்திகளை தாண்டி விளையாடுவதுதான் பாண்டி விளையாட்டு. வயல் வெளிகளில் வரப்புகளில் நெற்கட்டுகளுடன் தாண்டி செல்வதற்காக இளம் வயதிலேயே கொடுக்கப்படும் பயிற்சிதான் பாண்டி விளையாட்டு.

ஆட்டத்துடன் கிண்டலான பாட்டும் எசப்பாட்டுமாக பெண் சுட்டிகளை குதூகலப்படுத்தும் விளையாட்டு, நொண்டி. இதற்கு பாண்டி ஆட்டம் என்றும் பெயர்.
இதை இரண்டு முதல் நான்கு பேர் விளையாடலாம். நொண்டிக்கான கட்டம் போட, தரையில் ஒன்றரை அடி நீளம், மூன்று அடி அகலம்கொண்ட ஆறு கட்டங்கள் கிழிக்க வேண்டும். பிறகு, மண்சட்டி ஓட்டை எடுத்து, ஒரு ரூபாய் நாணயத்தைவிட கொஞ்சம் பெரிதான அளவில் வட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை, ஒவ்வொருவரும் தனித்தனியாக  வைத்து இருப்பார்கள்.
நொண்டிக் கோட்டின் ஆறாவது கட்டத்தில் சின்னதாக வட்டமிட்டு, முதல் கட்டத்தின் அருகில் இருந்து, ஓட்டை எறிய வேண்டும். வட்டத்துக்குள் யார் ஓடு சரியாக விழுகிறதோ, அவரே முதலில் ஆட்டத்தைத் துவக்குவார். இருவர் சரியாகப் போட்டுவிட்டால், 'ராஜாவா... மட்டியா?’ போட்டு, ஆரம்பிப்பார்கள்.
ஆடுபவர், முதல் கட்டத்தில் ஒட்டைப் போடும்போது, 'ஒண்ணான்’ எனச் சொல்லி, இடது காலைத் தூக்கிக்கொண்டு, வலது காலால் ஓடு உள்ள கட்டத்தைத் தாண்டி, ஆறு கட்டங்களையும் நொண்டி அடித்துப் போக வேண்டும். கட்டங்களில் உள்ள கோடுகளை மிதித்துவிடக் கூடாது. விரல் நுனி பட்டாலும் ஆட்டம் போய்விடும்.
ஆறாவது கட்டத்தைத் தாண்டி வெளியே வந்த பின்பு, இரண்டு கால்களையும் ஊன்றிக் கொள்ளலாம். பிறகு, ஆறாவது கட்டத்தில் இருந்து, ஒன்றாவது கட்டத்துக்கு நொண்டி அடித்து வந்து, ஒண்ணானில் போடப்பட்ட ஓட்டின் மீது, வலது காலால் மிதிக்க வேண்டும். பின்பு, ஓட்டில் இருந்து காலினை நகர்த்தி, ஒரு காலால் குதித்து, ஓட்டை அதே காலில் எகிறித் தள்ள வேண்டும். கட்டத்திற்கு உள்ளே இருந்தபடியே குதித்து, வலது காலால் தள்ளிய ஓட்டினை மிதிக்க வேண்டும். இப்படியாக, ஒண்ணானில் இருந்து ஆறான் வரை ஓட்டினைத் தள்ள வேண்டும்.
அடுத்து, 'மரத்து ஆறான்’ அதாவது, ஆறானில் இருந்து ஓட்டைத் தூக்கிப்போட்டு ஆட வேண்டும். ஆறு கட்டங்களையும் கடந்து வந்துவிட்டால், ஆட்டத்தில் கால்வாசியைக் கடந்ததாக அர்த்தம். அடுத்து, உள்ளங்கையில் ஒட்டைவைத்து, ஆறு கட்டங்களையும் நொண்டி அடித்து, முதல் கட்டத்துக்கு வந்தவுடன், உள்ளங்கை ஓட்டைத் தூக்கிப்போட்டு, புறங்கையில் பிடிக்க வேண்டும். புறங்கையில் ஓட்டினை வைத்துக்கொண்டு, ஆறு கட்டங்களையும் தாண்டி வந்து, முதல் கட்டத்தில் நின்று, ஓட்டை மீண்டும் மேலே தூக்கிவிட்டு, லாகவமாகப் பிடிக்க வேண்டும். இதற்குப் பெயர் சுண்டான். நொண்டி அடிக்கும்போது, தூக்கி வைத்து உள்ள இடது காலைத் தரையில் படாமல், வலது காலின் மீதுவைத்து, சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம். உள்ளங்கையில் இருந்து புறங்கையில் ஓட்டினைப் பிடிக்கும்போது, பெரும்பாலானவர்கள் ஆட்டம் இழப்பார்கள். இதிலுல் வெற்றி பெற்றால், அடுத்து காலான். நொண்டியாகத் தூக்கும் இடது காலின் மேல் பாகத்தில் ஓட்டினைவைத்து, ஒண்ணான் முதல் ஆறான் வரை தாண்டி வந்து, காலில் உள்ள ஓட்டை மேலே தூக்கி, கையால் பிடிக்க வேண்டும்.
இதுபோல் ஒட்டைத் தலையில்வைத்து, ஆறு கட்டங்களையும் நொண்டி வரும் தலையன், கண்களைக் கட்டி நொண்டி அடிக்காமல், நடந்துகொண்டே எறிந்த ஓட்டை மிதிக்கும் சவால், திரும்பி நின்று பின்புறமாக தலையைச் சாய்த்து ஓட்டைத் தூக்கிப் போடும், 'கொடையா பூவா?’ எனப் பல வகைகள் இருக்கின்றன.
சுட்டிகளின் வயது மற்றும் விளையாடும் சாமர்த்தியத்துக்கு ஏற்ப, இதில் ஒரு வகையையோ பல வகைகளிலோ விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் உடலின் அத்தனை உறுப்புகளும் வேலை செய்யும். ஒரு காலில் உடலின் முழு எடையைத் தூக்கி ஆடும்போது, உடலின் பலத்தையும் திடத்தையும்  தெரிந்துகொள்ளலாம்.  
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
powered by தேசம்